தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே 'தீபாவளி". தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமீயும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கெளரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதேயாகும். எல்லா நதிகள், ஏரிகள்,குளங்கள்,கிணறுகளிலும், நீர்நிலைகளிலும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா? " என்று வினவி விசாரிக்கிறோம்.

லக்ஷ்மீ தேவி உலகத்தாரின் சகல வெற்றிக்கும் காரணமான தெய்வம். மனஅமைதி, அறிவு, செல்வம் , தானியம் போன்ற பலவற்றை அளிக்கும் லக்ஷ்மீ ஒவ்வொருவருக்கும் வேறு வேறு தெய்வமாகக் காட்சியளிக்கிறாள். சிலருக்கு பொருட்செல்வம் தரும் தனலக்ஷ்மீ, சிலருக்கு வெற்றியைத் தரும் விஜயலக்ஷ்மீ, சிலருக்கு வாழ்வில் ஒளி தரும் ராஜலக்ஷ்மீ, சிலருக்கு வேண்டிய வரம் தரும் வரலக்ஷ்மீ, பலருக்கு இனிய இல்லறத்தை தரும் கிரஹலக்ஷ்மீ. இல்லத்தில் அமைதி, பளிச்சென்ற சுத்தம், குழந்தைகளின் சிரிப்பு, மென்மையான இசை, நறுமணம் நிறைந்த உணவு ஆகியவை வீட்டில் லக்ஷ்மீயை சுண்டி இழுக்கக்கூடியவை என்று கருதப்படுகிறது. எனவேதான் தீபாவளி சமயம் லக்ஷ்மீ தேவிக்கு விருப்பமான சூழ்நிலைகளை உருவாக்கி தேவியை வரவேற்று வளமான வாழ்க்கையைத் தருமாறு மக்கள் வேண்டுகின்றனர். தீபாவளியன்று, வழக்கங்கள் பல்வேறாயினும் குதூகலமும் கொண்டாட்டமும் ஒன்றே. ஜாதிமத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகையும் இதுவே.

தீபாவளியன்று , எங்களது "லக்ஷ்மீ குபேர பூஜாக்ரமம்" என்ற நூலின்படி, குபேர பூஜாக்ரமத்தை பின்பற்றி லக்ஷ்மீ தேவியை பூஜித்து, தீய குணங்களை அறவே அழித்து, நல்ல மனிதனாக வாழ முயற்சி செய்து இறைவனுடைய பரிபூரண அருளைப் பெறுவோமாக !

1. தீபாவளியைப் பற்றி........

Gajalakshmi
மனிதனிடம் எத்தனையோ அற்புதமான சக்திகள் இருந்தாலும் தான் பிறந்த பயனை மறந்து, தன்னைக்காத்துக் கொள்ளவும் மறந்து, தன்னால் தயாரிக்கப்பட்ட பொருள்களில் தானே மயங்கி, அழிவுப் பாதையில் செல்கிறான். மனிதனுடைய பிரத்தியேக உயர்ந்த குணங்களான விவேகம், பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்கே உரிய அகங்காரமானது பயனற்றுப் போகச் செய்துவிடுகிறது. இந்த அகங்காரத்தை ஒடுக்கி, பகுத்தறிவோடு அடக்கத்தை ஒளிரச் செய்வதே தீபாவளித் திருநாளின் பயன். நரகாசுரன் துவாபர யுகத்தில் தோன்றி, தான் எனும் அகங்காரம் கொண்டு, ஆத்திரம் அடைந்து, உலக மக்களை அழ வைத்துக் கொண்டிருந்தான். அவனை ஒழித்து உலக மக்களுக்குச் சாந்தியை அளித்தார் கிருஷ்ண பரமாத்மா. அகங்காரத்தின் அழிவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதத்திருநாளில் நாம் எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்யவேண்டும்? என்பதையெல்லாம் சிந்தித்து, நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ முயற்சி செய்து இறைவனுடைய அருளைப் பெறுவோமாக!

- காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரசுவதி சுவாமிகள்.

2. தீபாவளியை பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும்:

தீபாவளியை பற்றி நிறைய கதைகளும் நம்பிக்கைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முதன்மையாய், ஸ்ரீ ராமர் கைகேயியின் வரவலிமையால் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்டு வந்த ராம காவியத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இரண்டாவதாய், தீபாவளித் திருநாளை, துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகக் கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் மக்கள் கொண்டாடுகின்றனர். தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞானமும், அறியாமையும், அஹங்காரமும் அழிந்ததற்கு அடையாளமாக எல்லோரும் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி தீபங்கள் ஏற்றி வாணவேடிக்கைகளுடன் கொண்டாடவேண்டுமென்று அந்த அரக்கன் கேட்ட வரத்தின்படி இத்திருவிழாவை அனைவரும் காலம் காலமாகக் கொண்டாடுகின்றனர்.

மூன்றாவதாய் தசாவதாரங்களில் ஒன்றான வாமனாவதாரம் பற்றிய கதை. அசுரர்களின் அரசனான பாலி(ப்ரஹலாதனின் பேரன்), மூவுலகையும் ஆட்கொள்ள பகவானை நினைத்து விஸ்வஜித் யாகம் புரிந்து தேவர்களின் அரசனான இந்திரனிடமிருந்து தேவலோகத்தை கைபற்றினார். மனம் வாடிய அதிதி(தேவர்களின் அன்னை) மஹாவிஷ்ணுவிடம் முறையிட, வாமனராய் மிக சிறிய பிராமணர் உருவில் அவதரித்து , அஸ்வமேத யாகம் நடத்திக்கொண்டிருந்த அரசன் முன் தோன்றினார். வாமன உருவிலிருந்த விஷ்ணுவும் அரசவையில் பாலியிடம் மூன்று அடி மட்டுமே அளக்க தேவையான நிலம் வேண்ட, மன்னனும் அவரது கேளிக்கையை ஏளனமாய் நினைத்து வரம் வழங்கினார். வாமனரோ விஸ்வரூபமெடுத்து தம் முதல் அடியால் மண்ணுலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகையையும் அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் தேட, பாலியோ வேறு வழியின்றி கொடுத்த வாக்கை நிறைவேற்ற பகவானுக்கு தன் சிரம் தாழ்த்தி இடமளித்தார். இவ்வாறாக சொன்ன சொல்லை காப்பாற்றி மஹாவிஷ்ணுவின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். சில ஊர்களில் பாலியின் கதையை நினைவுகூறும் வகையிலும் தீபாவளித்திருநாளை கொண்டாடுகின்றனர்.

3. மாநிலங்களில் தீபாவளி கொண்டாட்டம்:

மேற்கு வங்காளம் - கிழக்கு திசை

மஹாளய அமாவாசையன்று தொடங்கி "துர்க்கா பூஜா" கொண்டாடும் வங்காள மக்கள், பூஜைக்கான கோலாகலப் பூரிப்பை ஒரு மாதம் கொள்கின்றனர். மஹாளய அமாவாசைக்கு அடுத்த அமாவாசையே தீபாவளி. இச்சமயம் காளி பூஜை கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி இரவில் பதினான்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவை வாழ்க்கையில் மனதில் ஏற்படக்கூடிய இருட்டைப் போக்கும் என நம்புகிறார்கள். இரவு பத்து மணியிலிருந்து காலை நான்கு மணி வரை நான்கு முறை பூஜை செய்வார்கள். மாலையில் லட்சுமி பூஜை நடைபெறும். காளியின் திருவுருவச் சிலை வங்காளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அலங்காரத்துடன் காணப்படும். மறுநாள் 'பாயி புட்கோ' என்ற பெயரில் இவர்களும் அவர்களின் சகோதரர்கள் நலன் வேண்டி, சகோதரனுக்கு சந்தன பொட்டு இட்டு, புதிய ஆடை, பரிசுகள் கொடுத்து இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.

மகாராஷ்டிரம் - மேற்கு திசை

இம் மாநிலத்தினர் தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான திரயோதசி அன்று எண்ணெய் ஸ்நானம் செய்து, மஞ்சள் தேய்த்து நீராடுகின்றனர். மாலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை செய்கிறார்கள். இனிப்பு வகைகள் செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஒரு வாரம் முன்பிருந்தே தீபாவளிப் பூஜைக்கு தயார் செய்கின்றனர். வீட்டை சுத்தம் செய்து அனைத்து பாத்திரங்களையும் கழுவி, விதவிதமான இனிப்புகளை தயாரித்து, புது துணிமணிகளை வாங்கி பண்டிகை கொண்டாட முற்படுகின்றனர். சதுர்த்தசியன்று மாலை 'தன்பூஜா' எனப்படும் லக்ஷ்மிபூஜை நடத்துகின்றனர். இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியவர்கள் வீட்டில் கூடி பூஜை செய்கின்றனர். வீட்டிற்குப் பெரியவர் பூஜைசெய்ய, வீட்டின் பெண்மணிகள் மராட்டிய பாணியில் புடைவை அணிந்து மூக்கில் 'நாத்' என்ற வளையம் அணிந்து, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு மங்களகரமாக காட்சி அளிக்கின்றனர். இனிப்பு வகைகளில் குறிப்பாக பால் பாயசம், பாசந்தி, பூரன் போளி ஆகியவை செய்வார்கள். இந்நாளை நரக சதுர்த்தசி என்று அனைவரும் அழைப்பதால் இம் மாநிலத்தினர் தென்னாட்டு மக்களைப் போல் நரகனை வதம் செய்த நாளென்று கருதுகின்றனர் என்று புரிந்து கொள்ளலாம். அமாவாசையன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை செய்து, நிவேதனம் செய்கின்றனர். அந்த இனிப்புகளை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் தருகின்றனர். மூன்று நாட்களும் மண் அகல்களில் விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளி மயமாக்குகின்றனர்.

உத்திரபிரதேசம் - வடக்கு திசை

இந்துமதக் கடவுள்களாக வணங்கப்படும் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் பிறந்த பூமி இம்மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் எல்லாப் பண்டிகைகளையும் மிகச் சிரத்தையுடன், மிகவிமரிசையாகக் கொண்டாடுவதற்குப் பெயர் பெற்றவர்கள். இம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்து வெற்றிவாகை சூடித் திரும்பிய நாளாகக் கருதுகின்றனர். அதனால் இந்த மாநிலத்தில் பல இடங்களில் தீபாவளிக்கு முன்னர் நவராத்திரி சமயத்தில் ராம்-லீலா என்ற நாடக வடிவக் கூத்து நடை பெறும். மேலும் தீபங்கள் ஏற்றி ஒளிதரும் நாளாக இவர்கள் இந்நாளைக் கருதுவதால் தீபஒளியே தீபாவளி என்கின்றனர். தீபாவளி அன்று காலை அலுவலகங்களில் லக்ஷ்மிபூஜை நடத்தி இனிப்பு, பரிசுகள் ஆகியவற்றை பணியாளர்களுக்கு அளிக்கின்றனர். மதியம் வித வித உணவு வகைகள் சமைத்து குடும்பத்திலுள்ளோர் சேர்ந்து உண்டு மகிழ்கின்றனர். தீபாவளியன்று மாலை வீட்டில் விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் படத்தை வைத்து பஜனைகள் பாடி, ஆரத்தி எடுத்து பூஜிக்கின்றனர். பிறகு மிகமிக விமரிசையாக வாணம், பட்டாசு, மத்தாப்பு வகைகளை கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். மேலும் தீபாவளியன்று ஒருவருக்கொருவர் பரிசளிப்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் தீபாவளி சமயம் நகர் முழுவதும், எங்கும் பரிசுப்பொருட்கள் மலிவாகவும், ஏராளமாகவும் கிடைக்கின்றன. தீபாவளியன்றைக்கு மறுநாள் "பையாதூஜ்" என்ற பூஜை நடத்த சகோதரிகள் சகோதரன் வீட்டிற்குச் சென்று ஆரத்தி எடுத்து, சகோதரனின் நலனிற்காக பிரார்த்திக்கின்றனர். அவர்கள் அன்பு மழையில் நனைந்து சகோதரன் சகோதரிக்கு பரிசு தருகிறார். தீபாவளியன்றும் பரிசு, மறுநாளும் சகோதரரிடமிருந்து பரிசு என ஒரே பரிசு மழை பொழியும் பண்டிகைதான் தீபாவளி!

தீபாவளிப் பண்டிகையானது முக்கியமான இந்துப்பண்டிகையாக இருந்தாலும், இது சீக்கியர்களாலும், ஜைனர்களாலும் கூட கொண்டாடப்படுவது இதன் தனிச்சிறப்பாகும். சீக்கியர்களின் குருவான ஹர்கோவிந்த் மொகலாய அரசர்களின் சிறையிலிருந்து விடுபட்டு அமிர்தசரஸ் நகரத்துக்குத் திரும்பியதும் ஒரு தீபாவளி தினத்தன்றுதான் என்பதால் இந்த நாளை சீக்கியர்கள் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று குருத்வாராக்கள் அனைத்திலும் அகல் விளக்குகளும், மெழுகுவர்த்திகளும் ஏற்றி வைக்கப்பட்டு புனித நீராடலுடன் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.

ஜைனர்களுக்கும் தீபாவளி ஒரு முக்கிய விழாவாகும், ஜைன தீர்த்தங்கரரான மகாவீரர், பாவபுரி என்ற இடத்தில் தீபாவளித்திருநாள் அன்று முக்தி அடைந்தார். இந்த நாளை ஜைனர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது உண்ணாவிரதம் அனுஷ்டித்து, மகாவீரர் அருளிய உபதேசங்களை படிக்கிறார்கள். ஜைன புதுவருடமும் அப்போதுதான் துவங்குகிறது.

ஒரு சமுதாய விழாவாக மாறிவிட்ட தீபாவளி, குடும்பத்துக்குள்ளும், உறவினர்,நண்பர்கள் இடையேயும் அன்பையும், பாசத்தையும் வளர்த்து, மக்களை இணைக்கும் ஒரு பாலமாக பயன்படுகிறது. கவலைகளையும் துன்பங்களையும் மறந்து வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் துணிவையும் தருகிறது.

'"இரவு இருள் நிறைந்து இருக்கிறது,
இங்கு நம் வாழ்வாலும், பக்தியாலும்
அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைப்போம் ! " ரவீந்தரநாத் தாகூர்

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதிமணி விளக்கே ஸ்ரீ தேவி பொன் மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாட்சி தாயாரே

பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரிபோட்டு
குளம்போல நெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க

மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு மகிழ்ந்தேன்
மாங்கல்ய பிச்சை மடிபிச்சை தாருமம்மா
சந்தான பிச்சையுடன் தானங்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்களும் தாருமம்மா

பட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா
கொட்டகை நிறைய குதிரைகளை தாருமம்மா
புகழுடம்பை தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் என்றன் அண்டையிலெ நில்லுமம்மா

சேவித்தெழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சீர கீரிடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன்
ச்வுரி முடிகண்டேன் தாழை மடல் சூடகண்டேன்

பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரி பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கமின்ன மாலையசைய கண்டேன்

கைவளையல் கலகலவென கணையாழி மின்ன கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்க கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் காலாளி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர கண்டு மகிழ்ந்தேன் அடியேன் நான்

அன்னையே அருந்துணையே அருகிருந்துகாருமம்மா
வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.



ஸ்ரீ லக்ஷ்மீநரஸிம்ஹாஷ்டகம்
(ஸ்ரீ வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளியது.)

ஸ்ரீமதகலங்க பரிபூர்ண ஸஸிகோடி ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்நம் தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

பாத கமலாவதந பாதகி ஜநாநாம் பாதக தவாநல பதத்ரிவர கேதோ
பாவந பராயண பவார்த்திஹரயா மாம் பாஹி க்ருபயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக் பங்க நவகுங்கும விபங்கில மஹோர:
பண்டிதநிதாந கமலாலய நமஸ்தே பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

மெளளிஷு விபூஷண மிவாமர வராணாம் யோகி ஹ்ருதயேஷுச ஸ்ரீரஸ்ஸுநிகமாநாம்
ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

வாரிஜ விலோசந மதந்திம தஸாயாம் க்லேஸ விவஸீக்ருத ஸமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா ஸஹ ஸரண்ய விஹகாநாம் நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

ஹாடக கிரீட வரஹார வநமாலா தார ரஸநா மகரகுண்டல மணீந்த்ரை:
பூஷிதமஸேஷ நிலயம் தவ வபுர் மே சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

இந்து ரவி பாவக விலோசந ரமாயா: மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே நந்தித ஸுரேஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

மாதவ முகுந்த மதுஸூதந முராரே வாமந ந்ருஸிம்ஹ ஸரணம் பவ நதாநாம்
காமத க்ருணிந் நிகிலகாரண நயேயம் கால மமரேஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்நம் காமத மஸேஷ துரிதாமய ரிபுக்நம்
ய: படதி ஸந்தத மஸேஷ நிலயம் தே கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!