தைத்திருநாள் – பொங்கல் விழா –ஜனவரி 14 – 17
Posted in Editor's Desk on 01/13/2012 02:11 pm by Lifcoblogadminதை மாதத்தில் தமிழர்கள் விசேடமாக கொண்டாடும் பொங்கல் விழா பிறந்தது எப்படி? இலக்கிய காலத்திலேயே இந்திர விழா என்ற பெயரில் இவ்விழா இருந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. அக்காலத்தில் 28 நாட்கள் கொண்டாடியதற்கான சான்று இருக்கிறது.
மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால்,மேகம் மும்மாரி பெய்து, பயிர் பச்சை செழிக்கும் என நம்பி மக்கள் இதனை, இந்திர விழாவாகக் கொண்டாடினர். அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்து அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. காலப்போக்கில் சூரியனைப்பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து, தமது நன்றியை விவசாயிகள் தெரிவிக்கும் பொங்கல் திருநாளாக மக்கள் வழிபட துவங்கிவிட்டனர்.
இப்போது நாம் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் மட்டுமே இவ்விழாவை கொண்டாடுகிறோம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் – போகி
புதுப்பானையில் புது அரிசியிட்டு, கரும்பு, மஞ்சள் கிழங்கு கட்டி, சூரியனை வழிபட்டு சமைக்கும் – தைப்பொங்கல்.
உழவுத்தொழிலுக்கு உதவியாகயிருக்கும் கால் நடைகளுக்காக கொண்டாடும் – மாட்டுப்பொங்கல்
இறுதியாக,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் பொது இடங்களுக்கு குடும்பத்தாருடன் சென்று, இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் தரும் – காணும் பொங்கல்.
ஜாதி மத பேதமின்றி சமத்துவம் வளர்க்கும் நோக்கோடு துவக்கப்பட்டது தான் பொங்கல் விழா.
இயற்கையையும் உழைப்பையும் மையமாக வைத்து கொண்டாடப்படும் – பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்!
அனைவரும் இந்நந்நாளில் எங்களது ”சூரிய சதகம்”,”ஆதித்ய ஹ்ருதயம்” போன்ற புத்தகங்களை வாசித்து வளம் பெறுங்கள்.
– வசுதா முரளி.
