‘அஸத்தோமா ஸத்கமய, ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’ என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இருள் அகன்று, ஒளி ப்ரகாசிப்பதும். அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்குவதும்தான் தீபாவளிப்பண்டிகையின் முக்கியத்துவம். தீபாவளியன்று , எங்களது “லக்ஷ்மீ குபேர பூஜாக்ரமம்” என்ற நூலின்படி, குபேர பூஜாக்ரமத்தை பின்பற்றிலக்ஷ்மிதேவியைபூஜித்து, இறைவனுடைய பரிபூரணஅருளைப்பெறுவோமாக !
-வசுதா முரளி
தீபம் என்றால் ஒளிவிளக்கு , ஆவளி என்றால் வரிசை . வரிசையாய் விளக்கேற்றி ,மஹாலக்ஷ்மிக்கு விசேஷமாக பூஜை செய்தால் செல்வம் நிறைய கிடைக்கும் என்கிறது இந்த ஸ்லோகம்
”நீராஜிதோ மஹாலக்ஷ்மி மர்ச்சயன் ச்ரியமச்சனுதே
தீபைர் நிராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸம்ருதா”
பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கெளரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதேயாகும்.
“தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவளி தினே வஸேத்” எனும்
சாஸ்திர வரிகள் இதை நிரூபிக்கின்றன.எல்லா நதிகள், ஏரிகள்,குளங்கள்,கிணறுகளிலும், நீர்நிலைகளிலும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அந்த நீராடலைத்தான் “கங்கா ஸ்நானம் ஆச்சா? ” என்று வினவி விசாரிக்கிறோம்.
லக்ஷ்மி தேவி உலகத்தாரின் சகல வெற்றிக்கும் காரணமான தெய்வம். மனஅமைதி, அறிவு, செல்வம், தானியம் போன்ற பலவற்றை அளிக்கும் லக்ஷ்மி ஒவ்வொருவருக்கும் வேறு வேறு தெய்வமாகக் காட்சியளிக்கிறாள். சிலருக்கு பொருட்செல்வம் தரும் தனலக்ஷ்மி, சிலருக்கு வெற்றியைத் தரும் விஜயலக்ஷ்மி, சிலருக்கு வாழ்வில் ஒளி தரும் ராஜலக்ஷ்மி, சிலருக்கு வேண்டிய வரம் தரும் வரலக்ஷ்மி, பலருக்கு இனிய இல்லறத்தை தரும் கிரஹலக்ஷ்மி. இல்லத்தில் அமைதி, பளிச்சென்ற சுத்தம், குழந்தைகளின் சிரிப்பு, மென்மையான இசை, நறுமணம் நிறைந்த உணவு ஆகியவை வீட்டில் லக்ஷ்மியை சுண்டி இழுக்கக்கூடியவை என்று கருதப்படுகிறது. எனவேதான் தீபாவளி சமயம் லக்ஷ்மி தேவிக்கு விருப்பமான சூழ்நிலைகளை உருவாக்கி தேவியை வரவேற்று வளமான வாழ்க்கையைத் தருமாறு மக்கள் வேண்டுகின்றனர். தீபாவளியன்று, வழக்கங்கள் பல்வேறாயினும் குதூகலமும் கொண்டாட்டமும் ஒன்றே. ஜாதிமத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகையும் இதுவே.
1. தீபாவளியைப் பற்றி ………
“மனிதனிடம் எத்தனையோ அற்புதமான சக்திகள் இருந்தாலும் தான் பிறந்த பயனை மறந்து, தன்னைக்காத்துக் கொள்ளவும் மறந்து, தன்னால் தயாரிக்கப்பட்ட பொருள்களில் தானே மயங்கி, அழிவுப் பாதையில் செல்கிறான். மனிதனுடைய பிரத்தியேக உயர்ந்த குணங்களான விவேகம், பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்கே உரிய அகங்காரமானது பயனற்றுப் போகச் செய்துவிடுகிறது. இந்த அகங்காரத்தை ஒடுக்கி, பகுத்தறிவோடு அடக்கத்தை ஒளிரச் செய்வதே தீபாவளித் திருநாளின் பயன். நரகாசுரன் துவாபர யுகத்தில் தோன்றி, தான் எனும் அகங்காரம் கொண்டு, ஆத்திரம் அடைந்து, உலக மக்களை அழ வைத்துக் கொண்டிருந்தான். அவனை ஒழித்து உலக மக்களுக்குச் சாந்தியை அளித்தார் கிருஷ்ண பரமாத்மா. அகங்காரத்தின் அழிவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதத்திருநாளில் நாம் எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்யவேண்டும்? என்பதையெல்லாம் சிந்தித்து, நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ இறைவனுடைய அருளைப் பெறுவோமாக!”
- காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரசுவதி சுவாமிகள்
2.தீபாவளியை பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும்: தீபாவளியை பற்றி நிறைய கதைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முதன்மையாய், ஸ்ரீ ராமர் கைகேயியின் வரவலிமையால் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்டு வந்த ராம காவியத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
இரண்டாவதாய், தீபாவளித் திருநாளை, துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகத் தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞானமும், அறியாமையும், அஹங்காரமும் அழிந்ததற்கு அடையாளமாக எல்லோரும் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி தீபங்கள் ஏற்றி வாண வேடிக்கைகளுடன் கொண்டாடவேண்டுமென்று அந்த அரக்கன் கேட்ட வரத்தின்படி கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் மக்கள் அனைவரும் காலம் காலமாகக் கொண்டாடுகின்றனர்.
மூன்றாவதாய் தசாவதாரங்களில் ஒன்றான வாமனாவதாரம் பற்றிய கதை. அசுரர்களின் அரசனான பாலி (ப்ரஹலாதனின் பேரன்), மூவுலகையும் ஆட்கொள்ள பகவானை நினைத்து விஸ்வஜித் யாகம் புரிந்து தேவர்களின் அரசனான இந்திரனிடமிருந்து தேவலோகத்தை கைபற்றினார். மனம் வாடிய அதிதி (தேவர்களின் அன்னை) மஹாவிஷ்ணுவிடம் முறையிட, வாமனராய் மிகச் சிறிய பிராமணர் உருவில் அவதரித்து , அஸ்வமேத யாகம் நடத்திக்கொண்டிருந்த அரசன் முன் தோன்றினார். வாமன உருவிலிருந்த விஷ்ணுவும் அரசவையில் பாலியிடம் மூன்று அடி மட்டுமே அளக்கத் தேவையான நிலம் வேண்ட, மன்னனும் அவரது கோரிக்கையை ஏளனமாய் நினைத்து வரம் வழங்கினார். வாமனரோ விஸ்வரூபமெடுத்து தம் முதல் அடியால் மண்ணுலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகையையும் அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் தேட, பாலியோ வேறு வழியின்றி கொடுத்த வாக்கை நிறைவேற்ற பகவானுக்கு தன் சிரம் தாழ்த்தி இடமளித்தார். இவ்வாறாக சொன்ன சொல்லை காப்பாற்றி மஹாவிஷ்ணுவின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். சில ஊர்களில் பாலியின் கதையை நினைவுகூறும் வகையிலும் தீபாவளித் திருநாளை கொண்டாடுகின்றனர்.
3.மாநிலங்களில் தீபாவளி கொண்டாட்டம்:
மேற்கு வங்காளம் – கிழக்கு திசை
மஹாளய அமாவாசையன்று தொடங்கி “துர்க்கா பூஜா” கொண்டாடும் வங்காள மக்கள், பூஜைக்கான கோலாகலப் பூரிப்பை ஒரு மாதம் கொள்கின்றனர். மஹாளய அமாவாசைக்கு அடுத்த அமாவாசையே தீபாவளி. இச்சமயம் காளி பூஜை கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி இரவில் பதினான்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவை வாழ்க்கையில் மனதில் ஏற்படக்கூடிய இருட்டைப் போக்கும் என நம்புகிறார்கள். இரவு பத்து மணியிலிருந்து காலை நான்கு மணி வரை நான்கு முறை பூஜை செய்வார்கள். மாலையில் லட்சுமி பூஜை நடைபெறும். காளியின் திருவுருவச் சிலை வங்காளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அலங்காரத்துடன் காணப்படும். மறுநாள் ‘பாயி புட்கோ’ என்ற பெயரில் இவர்களும் அவர்களின் சகோதரர்கள் நலன் வேண்டி, சகோதரனுக்கு சந்தன பொட்டு இட்டு, புதிய ஆடை, பரிசுகள் கொடுத்து இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.
மகாராஷ்டிரம் – மேற்கு திசை
இம் மாநிலத்தினர் தீபாவளிப் பண்டிகையை நான்கு நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். திரயோதசி அன்று எண்ணெய் ஸ்நானம் செய்து, மஞ்சள் தேய்த்து நீராடுகின்றனர். மாலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை செய்கிறார்கள். இனிப்பு வகைகள் செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஒரு வாரம் முன்பிருந்தே தீபாவளிப் பூஜைக்கு தயார் செய்கின்றனர். முதல்நாள் ‘நரக சதுர்த்தசி’ அன்று குறிப்பாக இனிப்பு வகைகளில் பால் பாயசம், பாசந்தி, பூரன் போளி ஆகியவை செய்வார்கள். இந்நாளை நரக சதுர்த்தசி என்று அனைவரும் அழைப்பதால் இம்மாநிலத்தினர் தென்னாட்டு மக்களைப் போல் நரகனை வதம் செய்த நாளென்று கருதுகின்றனர். இரண்டாவது நாள் வியாபாரிகள் தங்கள் கடைகளைச் சுத்தம் செய்து புதுக்கணக்கு தொடங்க அன்று மாலை ‘தன்பூஜா’ எனப்படும் ‘லக்ஷ்மி பூஜை’ நடத்துகின்றனர். மூன்றாவது நாள் ‘ பலி பிரதிபா’ .மஹாபலியை, வாமன அவதாரத்தில் பாதாளத்தில் அழுத்திய நிகழ்ச்சியின் அடையாளமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. எனவே மூன்று நாட்களும் மண் அகல்களில் விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளி மயமாக்குகின்றனர். நான்காவது நாள் அன்று சகோதரர்கள் குடும்ப சகிதம் சகோதரிகள் வீட்டுக்குச் செல்லும் நாளை ‘மஹா பிஜ்’ என்று கூறுகிறார்கள்.
உத்திரபிரதேசம் – வடக்கு திசை
வட நாட்டில், தீபாவளிக்கு முதல்நாள், ‘யம தீபம்’ என்று ஏற்றுகிறார்கள். ஒரு பெரிய விளக்கை ஏற்றி வீட்டில் உயரமான இடத்தில் வைப்பதே ”யம தீப”மாகும்.
இந்துமதக் கடவுள்களாக வணங்கப்படும் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் பிறந்த பூமி இம் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் எல்லாப் பண்டிகைகளையும் மிகச் சிரத்தையுடன், மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்குப் பெயர் பெற்றவர்கள். இம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்து வெற்றி வாகை சூடித் திரும்பிய நாளாகக் கருதுகின்றனர். அதனால் இந்த மாநிலத்தில் பல இடங்களில் தீபாவளிக்கு முன்னர் நவராத்திரி சமயத்தில் ராம்-லீலா என்ற நாடக வடிவக் கூத்து நடை பெறும். மேலும் தீபங்கள் ஏற்றி ஒளிதரும் நாளாக இவர்கள் இந்நாளைக் கருதுவதால் தீபஒளியே தீபாவளி என்கின்றனர். தீபாவளி அன்று காலை அலுவலகங்களில் லக்ஷ்மி பூஜை நடத்தி இனிப்பு, பரிசுகள் ஆகியவற்றை பணியாளர்களுக்கு அளிக்கின்றனர். மதியம் வித வித உணவு வகைகள் சமைத்து குடும்பத்திலுள்ளோர் சேர்ந்து உண்டு மகிழ்கின்றனர். தீபாவளியன்று மாலை வீட்டில் விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் படத்தை வைத்து பஜனைகள் பாடி, ஆரத்தி எடுத்து பூஜிக்கின்றனர். பிறகு மிகமிக விமரிசையாக வாணம், பட்டாசு, மத்தாப்பு வகைகளை கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். மேலும் தீபாவளியன்று ஒருவருக்கொருவர் பரிசளிப்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் தீபாவளி சமயம் நகர் முழுவதும், எங்கும் பரிசுப்பொருட்கள் மலிவாகவும், ஏராளமாகவும் கிடைக்கின்றன. தீபாவளியன்றைக்கு மறுநாள் “பையாதூஜ்” என்ற பூஜை நடத்த சகோதரிகள் சகோதரன் வீட்டிற்குச் சென்று ஆரத்தி எடுத்து, சகோதரனின் நலனிற்காக பிரார்த்திக்கின்றனர். அவர்கள் அன்பு மழையில் நனைந்து சகோதரன் சகோதரிக்கு பரிசு தருகிறார். தீபாவளியன்றும் பரிசு, மறுநாளும் சகோதரரிடமிருந்து பரிசு என ஒரே பரிசு மழை பொழியும் பண்டிகைதான் தீபாவளி.
‘அஸத்தோமா ஸத்கமய, ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’ என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அறியாமை, வறுமை, வலிமையின்மை, அதர்மம் இவையாவும் இருளுக்கு சமானம். அறியாமை அகன்று அறிவு நிறைய பெருகுவதும், வறுமை யில்லாமல் வளமாக இருப்பதும், வலிமைபெறுவதும், இருள் அகன்று, ஒளி ப்ரகாசிப்பதும். அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்குவதும்தான் தீபாவளிப்பண்டிகையின் முக்கியத்துவம்.
தீபாவளியன்று , எங்களது “லக்ஷ்மீ குபேர பூஜாக்ரமம்” என்ற நூலின்படி, குபேர பூஜாக்ரமத்தை பின்பற்றி லக்ஷ்மி தேவியை பூஜித்து, தீய குணங்களை அறவே அழித்து, நல்ல மனிதனாக வாழ இறைவனுடைய பரிபூரண அருளைப் பெறுவோமாக !